”மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்!” – X தள பக்கத்தில் விஜய் ஆண்டனி பதிவு!

”மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்; நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்” என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்…

”மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்; நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்” என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிலேயே மீரா உயிரை மாய்த்து கொண்டார். இதுதொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளியில் மீரா பொருளாதார பாடப் பிரிவு எடுத்து படித்து வந்தார். பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள மீரா, கடந்த ஆறு மாதம் காலமாக தனியார் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக மீரா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு படித்த மீரா மன அழுத்தத்துடன் இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் உயிரிழந்தது தொடர்பாக தனது X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம்  சிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். இவ்வாறு விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.