ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!

ஜெய்ப்பூரில் மனைவிக்கு கொடுக்க வேண்டிய 55,000 ரூபாய் ஜீவனாம்சம் தொகையை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார். ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவத், சீமா குமாவத் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

ஜெய்ப்பூரில் மனைவிக்கு கொடுக்க வேண்டிய 55,000 ரூபாய் ஜீவனாம்சம் தொகையை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவத், சீமா குமாவத் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 முதல் 4 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காரணத்தால், இருவரும் விவாகரத்து கோரி ஜெய்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​குடும்பநல நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு ரூ.5,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று தஷ்ரத்க்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை கடந்த 11 மாதங்களாக சீமாவுக்கு தஷ்ரத் கொடுக்கவில்லை என்பதால் தஷ்ரத்க்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதன் விளைவாக, தஷ்ரத் கைது செய்யப்பட்டு கடந்த ஜூன் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சீமாவிற்கு கொடுக்க வேண்டிய 11 மாத தொகையான 55,000 ரூபாயை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக தஷ்ரத்தின் உறவினர்கள் ஏழு பைகளில் வைத்து கொண்டுவந்தனர். இந்த மொத்த நாணயங்களின் எடை 280 கிலோ என கூறப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் நாணயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதற்கு சீமா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தஷ்ரத் குமாவத் ​​இது இந்தியாவின் சட்டப்பூர்வ நாணயங்கள், எனவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, ஜூன் 18-ம் தேதியிலிருந்து நாணயங்களை எண்ணும்படியும், ஒரு பையில் தலா ரூ.1,000 இருக்கும்படி சீமாவிற்கு கொடுக்க வேண்டும் எனவும் தஷ்ரத்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு வரும் ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதுகுறித்து சீமா குமாவத் சார்பில், ”இது மனிதாபிமானமற்ற செயல். 11 மாதங்களாக ஜீவனாம்சம் தொகையை செலுத்தவில்லை. தற்போது மனைவிக்கு தொல்லை கொடுப்பதற்காக ரூ.55,000 காசுகளை கொண்டு வந்துள்ளார்.” என கூறப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.