தேர்தல் வாக்குறுதிகளில் 4இல் ஒரு பங்கை கூட நிறைவேற்றாத திமுக – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்….!

தேர்தல் வாக்குறுதிகளில் 4இல் ஒரு பங்கு கூட திமுக நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு முழுவதும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரத்தின் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது ;

அதிமுக கூட்டணி ஒருவருக்கருவர் விட்டுக்கொடுத்து அமைத்த கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படி இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். விசிக கூட பங்கு கேட்க முயற்சிக்கிறது. தற்போது புதியதாக ஒரு கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது, அவர்கள் கடந்த மாதம் மாநாடு நடத்தி துணை முதலமைச்சர் பதவி கேட்டார்கள்

அதிமுகவின் அழுத்தம் காரணமாக, பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது 1000 ரூபாய் திட்டத்தை நிறுத்தினோமா, ஸ்டாலின் மக்களிடம் பொய் கூறுகிறார்.

1.5 கோடி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் என்ற கணக்கில் ஆண்டிற்கு 24ஆயிரம் கோடி கொள்ளையடித்து உள்ளார்கள். அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் கொள்ளையடிக்கிறார்கள். குடிநீர் வழங்கல் துறையில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்பாக நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்து, தற்போது லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்தயுடன் ஆண்டிற்கு 3 சிலிண்டர் வழங்கப்படும். ஆண்களுக்கு பேருந்தில் இலவச பயணம். பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்கிட 5 லட்சம் பெண்களுக்கு 25000 ரூபாய் மானியம் அளிக்கப்படும். முதியோர் உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 4இல் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 100 நாள் வேலையை உயர்த்துவதாக கூறினார்கள் நிறைவேற்றினார்களா…? ஆனால் அதிமுக பாஜகவிடம் கோரிக்கை வைத்து 125 நாட்களாக  உயர்த்தியுள்ளது. பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே, மக்களிடம் இருந்த வரவேற்பை பார்த்து பயந்த திமுக 3 மாத தொகையை முன்பணமாக கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.