முக்கியச் செய்திகள் குற்றம்

பட்டியலினம் என்பதால் காதல் மனைவியை கைவிட்ட கணவன்!

பட்டியலினம் என்பதற்காக காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கைவிட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எண்ணூரில் வசித்த கிருஷ்ணவேணி என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் கல்லூரியில் படித்தபொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்று இருவருக்குமே தெரிந்த நிலையில், வெங்கடேஷ் தனக்கு அப்பா அம்மா இருவருமே கிடையாது என்று ஏமாற்றி கிருஷ்ணவேணியை எண்ணூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்களை கிருஷ்ணவேணி வைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமணமான சிறிது நாட்களில் வெங்கடேசனின் பெற்றோர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைபூண்டி என்ற ஊரில் இருப்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து தனது கணவரிடம் கேட்ட பொழுது எங்களது பெற்றோர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக பெற்றோர்கள் உள்ள விவரத்தை மறைத்து விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், நமக்கு திருமணம் நடைபெற்றதை கூற வேண்டாம் என்றும், மீறி கூறும் பொழுது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி கிருஷ்ணவேணியின் வாயை அடைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது (தற்போது 8
வயது). பின்னர், 2016ஆம் ஆண்டு வெங்கடேசனின் பெற்றோர் அவருக்குத் திருமணம்
செய்து வைப்பதற்காக மணப்பெண்களின் ஜாதகம் மற்றும் போட்டோவை வெங்கடேசனின் போனிற்கு அனுப்பிவைத்து வந்துள்ளனர். இதனை கண்ட கிருஷ்ணவேணி ஆத்திரத்தில் தனக்கு நடந்த திருமணத்தை பற்றி தனது மாமனாரான வெங்கடேசனின் அப்பாவிடம் கூறியுள்ளார். இச்செய்தியை அறிந்த வெங்கடேசன் அன்றைய தினமே கோவித்துக்கொண்டு அவரது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

பின்னர், கணவன், மனைவி இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனதை தொடர்ந்து கிருஷ்ணவேணி பலமுறை வெங்கடேசனை தொடர்பு கொண்டபோதும் முறையான பதில் அளிக்காமல் வெங்கடேசன் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் விவாகரத்து செய்வதற்காக வழக்குத் தொடுத்துள்ளார். அதிலும் சரிவர ஆஜராகாமல் வழக்கு நீடித்து வந்த நிலையில் கிருஷ்ணவேணி தான் வறுமையில் வாடுவதாகக் கூறி கோர்ட்டில் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் மாதம் பணம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணைப்படி வெங்கடேஷ் கிருஷ்ணவேணிக்கும், குழந்தைக்கும் சேர்த்து மாதமாதம் 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அளித்துள்ளது. ஆனால், இதுவரையிலும் பணத்தை அளிக்கவில்லை.

இந்த சூழலில் தனது பெற்றோர்கள் மூலமாக மீண்டும் சேர்ந்து வாழலாம்
என்று கூறியுள்ளார் வெங்கடேசன். இதனை நம்பி கிருஷ்ணவேணி வெங்கடேசன் ஊருக்குச் சென்றதாகவும், அங்கு ஊர் அறிய 2020ஆம் ஆண்டு கோவிலில் வைத்து மீண்டும் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அன்று முதல் கிருஷ்ணவேணி வெங்கடேசனின் சொந்த ஊரான திருத்துறைபூண்டியில் வாழத் தொடங்கியதாகவும், ஆனால் கிருஷ்ணவேணி பட்டியலின சாதியைச் சார்ந்தவர் என்பதற்காக அவரது மாமியார் ஜாதி கொடுமையில் ஈடுபட்டதாகவும்,  இவர்களது குழந்தையும் அதே நோக்கத்தோடு பார்த்ததாகவும் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி தனது தாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து வெங்கடேசனின் பெற்றோர்கள் கிருஷ்ணவேணியின் தாயை ஊருக்கு சமரசம் பேசுவதற்காக வரவழைத்துள்ளனர். அப்போது, குழந்தையை ரூமில் வைத்து பூட்டி வைத்துக் கொண்டு கிருஷ்ணவேணியிடம் மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், அதற்கு சாட்சிகளாக கிருஷ்ணவேணியின் தாயிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தையை வைத்து மிரட்டுவதால் வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டுவிட்டு உயிருக்கு பயந்து சென்னைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட புகார் அளித்து வந்த நிலையில், மீண்டும் வெங்கடேசனின் ஊர் தலைவர்கள் சென்னைக்கு வந்து கிருஷ்ணவேணியின் ஊர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து விடுகிறோம். வெங்கடேசனை விட்டு ஒதுங்கி கொள்ளுமாறு பஞ்சாயத்து பேசி உள்ளனர். ஆனால், கிருஷ்ணவேணி தனக்கு பணம் வேண்டாம், வெங்கடேசன் உடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களோ எப்படியாவது கிருஷ்ணவேணியிடம் பணத்தை கொடுத்து சரிகட்டி விடலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால், அது முடியாத நிலையில் மீண்டும் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த சூழலில் கிருஷ்ணவேணி வலைத்தளங்களில் வெங்கடேசனின் புகைப்படத்தை அனுப்பி இவருக்கும், தனக்கும் திருமணம் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இவரை வேறு யாரும் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இந்த வலைதள மெசேஜை பார்த்த நபர் ஒருவர் இவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால், இவருக்கு தற்போது திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி வெங்கடேசனிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணவேணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் தனது உயிருக்கு பயந்து சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருப்பதாகவும், தனக்கு சமூக நீதி கிடைப்பதற்காக போராடி வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘அண்ணாத்த’ டீசர் வெளியானது

Halley Karthik

மாவட்டச் செயலாளர்களை கடிந்த மு.க. ஸ்டாலின்

Halley Karthik

நிலவுக்கு ஃப்ரீ டிக்கெட் : ஜப்பான் தொழிலதிபர் அறிவிப்பு

Jeba Arul Robinson