திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

மேடவாக்கம் அருகே திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த மேடவாக்கம், விஜயநகர் பூங்கா தெருவில் கூலி வேலை செய்து வருபவர் சத்தியசீலன்(38). இவரது மனைவி மீனா(40) வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 22 வயது மகன், 21 வயது மகள் என குடும்பத்தோடு கடந்த ஐந்து மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சத்தியசீலன் மனைவி மீனாவிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நிருத்துமாறு சத்தியசீலன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் மீனா இதனை பொருட்படுத்தாமல் பக்கத்து வீட்டு அருணுடன் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய சத்தியசீலன் அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியசீலன் மற்றும் மீனா இருவருக்கும் வீட்டில் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சத்தியசீலன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனா கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மீனாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீனா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள மேடவாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் சத்தியசீலனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மீனாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, கணவர் இறந்த நிலையில், சத்தியசீலனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்தது
தெரியவந்தது. பக்கத்து வீட்டு வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்து மனைவியை கொலை செய்ததாக சத்தியசீலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.