உண்ணவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் மருத்துவனைக்கு மாற்றம் – டெல்லி காவல்துறை நடவடிக்கை…!

டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தின் 21 ஆம் நாளான இன்று ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் அகற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் (டெல்லி) உத்தரவு மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி, திரு. சோனம் வாங்சுக் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சையளிப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அப்பகுதியை அமைதியான முறையில் விரைவில் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்சுக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்டகால உண்ணாவிரதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் பலவீனமாக உள்ளார். தற்போது அவரது நிலை சீராக இருந்தாலும், அவரது உடல் செயல்பாடுகளை மீட்டெடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் இணைந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணவிரதப்போராட்டத்தை தொடங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.