கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, 5 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சரானார்.
2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. எனினும் அக்கட்சி ஐந்தாண்டு காலத்துக்கும் பதவியில் நீடிக்க முடியவில்லை. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால் எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி ஏற்பட்டது. அதன்பின்னர் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனிடயே பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளதை முன்னிட்டு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதற்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் சென்னப்பட்னா தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி 15,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராம்நகரா தொகுதியில் போட்டியிட்ட எச்.டி.குமாரசாமியின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருமான நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார்.
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ், வெறும் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிதாபூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே 13,640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 35,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஷூப்ளி தார்வாட் (மத்தி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டரும், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் தோல்வியை தழுவினர்.







