44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எப்படி நடைபெறவுள்ளது என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படும் அரங்கில் ஏற்கனவே 22,000 சதுர அடி பரப்பளவில் அரங்கம் இருந்தாலும், கூடுதல் வசதிக்காகக் கிட்டத்தட்ட 52,000 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமாக, நவீன முறையில் அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 10,000 சதுர அடி பரப்பளவில் பார்வையாளர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கவுள்ளவர்களுக்கான பார்க்கிங் வசதி உருவாக்கப்பட்டு, பறந்து விரிந்த மைதானமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
போட்டியைக் கண்டுகளிக்கும் வகையில் கூடுதல் பார்வையாளர்கள் பங்கேற்கும் அரங்கம், முன்னணி நிறுவனங்கள் வணிக வளாகங்கள் அமைக்கும் வகையில் வசதியான இடம், மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு கூடாரங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கூடிய நவீன கட்டமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரேபியக் கூடாரங்கள் போல வெயிலின் தாக்கம் உட்புகாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் மட்டுமே, 512 சதுரங்கப் பலகைகளுடன் போட்டியாளர்கள் பங்கேற்கும் வகையில் மேஜைகள் அமைக்கப்பட்டு, இருபுறமும் 8 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
விளையாட்டுப் போட்டிகளை முக்கிய நபர்கள் கண்டுகளிப்பதற்காக அரங்கத்தின் இருபுறமும் குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அனைத்தும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே வழிநடத்தப்படும். சர்வதேச செஸ் போட்டிகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சென்சார் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட நவீன சதுரங்கப் பலகைகள் கொண்டு, ஒவ்வொரு மேஜையிலும், இரு நாடுகள் எதிரெதிரே சந்திக்கும் வகையில் 4 பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும்.
ஜூலை 29-ஆம் தேதி மதியம் 3 மணிக்குத் துவங்கப்படும் போட்டி முதல், ஆகஸ்ட் 9-ஆம் தேதி இறுதிப் போட்டி வரை 11 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அனைத்து நாடுகளுக்கும் போட்டி நடைபெறும். ஆகஸ்ட் 4-ஆம் தேதி அனைத்து நாடுகளுக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் மட்டும் போட்டிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடும், மற்றொரு நாட்டுடன் விளையாடி வெற்றி பெறும் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இறுதி நாளில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள நாட்டிற்கே தங்கம் என அறிவிக்கப்பட்டு சாம்பியனாக அறிவிக்கப்பட உள்ளனர்.
போட்டியாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலை மேம்பாட்டிலிருந்து, மருத்துவ வசதிகள் வரை, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் செல்லும் வழி நெடுகிலும் ஆங்காங்கே தமிழர் பாரம்பரிய ஓவியங்கள் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியை நடத்தி முடிப்பதன் மூலம், உலக வரைபடத்தில் தமிழ்நாடு, மறக்கமுடியாத அடையாளமாக மாறக்கூடும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
– செய்தியாளர் நாகராஜன்.








