அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை அதாவது மே 4ம் தேதி தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் வெயில் இருக்கும் என்பதால், இதனை நாம் கவனமாக கையாள வேண்டியது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், வயிற்று வலி, மயக்கம், சோர்வு என உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடும் வெயில், உயிரிழப்புக்கும் காரணமாகிவிடும் என்பதால் இதில் எச்சரிக்கை தேவை.
கோடை வெயிலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி? நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? வாருங்கள் பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
கத்திரி வெயில் காலத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெயிலில் செல்ல நேர்ந்தால் குடை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்; காலணி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்
பயணத்தின்போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்
எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது நல்லது
கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணியலாம்
வெயிலில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும்; தண்ணீர் கொண்டு அடிக்கடி முகம், கை, கால்களை கழுவ வேண்டும்
காலை, நண்பகல், மாலை ஆகிய 3 வேலைகளில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது
அவ்வப்போது கால்களை 10 நிமிடங்களுக்கு தண்ணீரில் மூழ்கடித்தபடி வைத்திருப்பது நல்லது
வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது
கோடையில் உட்கொள்ள வேண்டியவை:
தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
இளநீர், நுங்கு குடிப்பது உடலின் குளிர்ச்சியை அதிகரிக்கும்
உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் நீர் மோர், நீராகாரம், கம்பங்கூழ், எலுமிச்சை ஜூஸ், பதநீர், தர்பூசணி, கிர்ணிபழம், முலாம்பழம், வெள்ளரி, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்டவற்றை அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது
புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், செள செள, முள்ளங்கி, புதினா, எள், சீரகம், கசகசா, வெந்தையம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது
தேவையான உடற்பயிற்சி:
எளிமையான சுவாசப் பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் செல்களையும், நரம்புகளையும் அமைதிப்படுத்தும் விளைவை ஊக்குவிக்கும்
இவற்றை கடைப்பிடித்து கோடை வெயிலை சிரமமின்றி கடந்து செல்வோம்… ஆரோக்கியமாக வாழ்வோம்…
- எழுத்து: பால. மோகன்தாஸ்