ரஷியா-உக்ரைன் இடையே நடைபெறும் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், மற்றும், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று 3-வது நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்த பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து இருநாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்-ரஷியா போர் தொடங்கிய போது வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இந்த போரில் எத்தரப்புக்கும் வெற்றி கிடைக்காது. ஆனால் அனைவரும் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
மேலும், இந்த போரில் பேச்சுவார்த்தைகள் மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழியாகும். இதில் இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த போர் மூலம் வளரும் நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போரின் விளைவுகள் குறித்து இந்தியா கவலை கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெர்மன் பிரதமர், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ரஷியா ஐ.நா சபையின் சானத்தை மீறியுள்ளது. மேலும் ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.





