பெண்களின் பாதுகாப்பிற்கு எத்தனையோ திட்டங்கள் முன்னெடுப்பட்டுள்ளன. பெண்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களை தற்காத்து கொள்வதை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.
உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண் சமத்துவம், பாதுகாப்பு, மரியாதை என எல்லாவற்றையும் பேசினாலும் பெண்கள் மீது தொடரும் அத்துமீறல்களும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குற்றங்களையும், குற்றவாளிகளையும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் Victim-கள் மீதே பழி சுமத்தும் பூமர் அங்கிள்கள் நம்மைச் சுற்றி கனிசமாக உலா வரத்தான் செய்கிறார்கள். சாத்தியத்திற்குரிய எல்லா வழிகளிலும் சமூக விடுதலையை வென்றாக வேண்டும் எனச் சொன்ன மால்கம் எக்ஸ்-ன் கூற்றுக்கு இணங்க சாத்தியம் இருக்கும் எல்லா இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பிற்காக நாம் திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லி நிர்பயா தொடங்கி, தெலங்கானா மாநில மருத்துவர் திஷா வரை இந்தியா முழுவதும் ஆண்களின் வக்கிரங்களால் பாதிக்கப்பட்ட ஏராளமானோரின் பட்டியல் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு விபத்து மரணத்திற்கு பின்னே புதிதாக முளைக்கும் வேகத் தடை போல ஒரு பெண்ணின் மரணத்திற்கு பின்னே கொஞ்ச நாட்களுக்கு மட்டும் பெண் பாதுகாப்பை பற்றி பேசி களைந்து விடும் போக்கு இங்கே சாதரணமாகிவிட்டது.
பெண்களின் பாதுகாப்பிற்காக அரசுகளும் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்று அனைவரது கைகளிலும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிப்போன மொபைல் போன்களை பெண்களின் பாதுகாப்பிற்காக எப்படி பயன்படுத்துவது என ஆலோசனை செய்த அரசுகள் அதற்கான சிறப்பு செயலிகளை உருவாக்கியுள்ளன. இவற்றை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் பாதுகாப்பற்ற தருணங்களை பெண்கள் சந்திக்கும் போது அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள அரசின் இந்த முயற்சிகள் பயன்படுகிறது. அதன்படி பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அரசின் 112 செயலி:
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு செயலி தான் 112 App. அனைத்து மாநிலத்திலும் இந்த செயலி பயன்படும். இந்த செயலியை டவுன்லோட் செய்த பின் அதில் கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழல் உருவானால் ஒரே பட்டனை அழுத்தினால் போதும் அது உடனே அருகில் இருக்கும் பாதுகாப்பு விபரங்களை தெரிவித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை அனுப்பும். இந்த செயலி ஆன்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் “காவலன் SOS” செயலி :
தமிழ்நாடு அரசின் சார்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு அவர்களது பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்தினுள் நான்கு இடங்களில் அவசர உதவி (Panic Button) பட்டனை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவுகளோ, பிரச்சனைகளோ பேருந்துக்குள் நிகழ்ந்தால் உடனடியாக அந்த பட்டனை அழுத்தலாம்.
அதேபோல தமிழ்நாடு காவல்துறை “காவலன் SOS “ எனும் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவசர உதவி எண் 100 இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திலோ, பாதுகாப்பற்ற சூழலிலோ இந்த காவலன் SOS செயலி பெரிதும் உதவும்.
இதனையும் படியுங்கள்: AI-யும் DJ-யும் சேர்ந்தா மாஸ்…! – இசை ரசிகர்களுக்கு புதிய விருந்து
மேலும் இதில் நமக்கு வேண்டிய முக்கியமான மூன்று நபர்களின் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏதேனும் அவசரம் நிகழும் போது உங்களது GPS இயங்க ஆரம்பித்து உங்களது மொபைல் போனில் உள்ள கேமராக்கள் 15 வினாடிகளுக்கு தானாகவே படம் எடுத்து அதனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். இந்த காவலன் SOS செயலி காவல்துறையால் 24×7 கண்காணிக்கப்படுகிறது.
ஆந்திர அரசின் “Disha” செயலி :
ஆந்திர மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘திஷா’ சட்டம் கொண்டு வந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு, அதன் ஒரு பகுதியாக ” திஷா” செயலியையும் அறிமுகம் செய்துள்ளது.
இதனையும் படியுங்கள்: வாட்சப்பில் தவறுதலாக அனுப்பிய பதிவுகளை எடிட் செய்யலாமா.? – எப்புட்ரா..?
இந்த செயிலியில் Track My Travel, காவல் உயர் அதிகாரிகளின் எண்கள், அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் தகவல்கள், பாதுகாப்பான இடங்கள் குறித்த தரவுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் இடங்களுக்கு காவல்துறையினர் சென்று பெண்களிடம் கட்டாயமாக இந்த செயலியை தரவிறக்கம் செய்ய வலியுறுத்துகின்றனர்.
கேரள அரசின் “நிர்பயம் App” :
பெண்களின் பாதுகாப்பிற்கு கேரள காவல் துறை அறிமுகம் செய்துள்ள செயலியின் பெயர் “Nirbhayam” . இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அவசர காலத்தில் தொடர்புகொள்வதற்கான எண்கள், பயணத்தை ட்ராக் செய்வது, ஒரே பட்டனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு என இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசின் “சுரக்ஷா” செயலி :
கர்நாடக மாநில அரசு பெண்களின் பாதுகாப்பிற்காக “சுரக்ஷா” எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பெங்களூரூ காவல் துறை கண்காணித்து வருகிறது. இந்த செயலில் உள்ள SOS பட்டனை 5முறை அழுத்தினால் உடனே GPS செயல்பட்டு 10 நொடிகளுக்கு நமது கேமரா ஆன் ஆகி வீடியோ பதிவேற்றி அதனை அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசின் Hawk Eye செயலி :
தெலுங்கானா அரசு பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள், காவல்துறையினர் மீது புகார், காவலர்களுக்கு மதிப்பெண் மற்றும் ஆலோசனை உள்ளிட்டவைகளை இணைத்து Hawk Eye எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனையும் படியுங்கள் : தேவையற்ற போன் அழைப்புகள் – தீர்க்க வழி என்ன.?
அதேபோல ஹைதராபாத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க “SHE Teams” எனும் பெயரில் புதிய காவல் பிரிவுகளையும், காவல் வாகனங்களையும் தெலங்கானா அரசு ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன வழி..?
ரயிலில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள், பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மத்திய இரயில்வே துறை
“R-MITRA” எனும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இரயில்வே தொடர்பான புகார்கள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருக்கும் பட்டனை பயன்படுத்தி புகார் தெரிவித்தால் உங்கள் அருகில் இருக்கும் இரயில்வே இன்ஸ்பெக்டருக்கு தகவல்களை தெரிவித்து பாதுகாப்பை உறுதி செய்யும்.
மேலும் இரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை அவர்கள் தொடங்கிய இடம் முதல் இறங்கும் வரை உறுதி செய்யும் வகையில் “Meri Saheli ” எனும் திட்டத்தை இரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரயிலில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.
– ச.அகமது , நியூஸ் 7 தமிழ்