ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள படம் கேப்டன். டெடி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஐஷ்வர்யா லஷ்மி, சிம்ரன், ஹரீஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் த்ரில்லராக உருவாகி உள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மினரல் தொழிற்சாலை காரணமாக பல வருடங்களாக மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் செக்டர் 42 என்ற இடத்தை மீண்டும் இயக்க அரசாங்கம் முடிவு செய்கிறது. அங்கு மனிதர்கள் நடமாட எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து நோ அப்ஜக்சன் சர்டிபிகேட் தரும்படி ராணுவத்திற்கு உத்தரவிடப்படுகிறது. அந்த இடத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள சென்ற ராணுவ வீரர்கள் திரும்பி வரவில்லை. இதனால் ஆர்யாவின் தலைமையில் ஒரு டீம் செக்டர் 42 உள்ளே செல்கின்றனர். செக்டர் 42 உள்ளே சென்ற அவர்களும் ஒரு வித்தியாசமான உயிரினத்தால் தாக்கப்படுகின்றனர். அந்த உயிரினங்களை ஆர்யாவின் டீம் எப்படி எதிர் கொண்டார்கள். செக்டர் 42வை கைப்பற்றினார்களா இல்லையா என்பது தான் கேப்டன் படத்தின் கதை.
ராணுவ அதிகாரியாக ஆர்யா இப்படத்தில் நடித்துள்ளார். ஃபிட்டான உடலுடன் ராணுவ அதிகாரியாக அதே தோற்றத்துடன் படம் முழுவதும் ஆர்யா திகழ்கிறார். காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், சண்டை காட்சிகள் என தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா. கதாநாயகியாக நடித்துள்ள ஐஷ்வர்யா லஷ்மி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஆர்யாவிற்கு அடுத்ததாக சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடக்கம் முதல் இறுதிவரை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்ரன்.
ஆரம்பம் முதலே கேப்டன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது. கேப்டன் படத்தின் போஸ்டர்கள் வெளியான போது ஹாலிவுட்டில் வெளியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரிடேட்டர் படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால் அதையும் தாண்டி வித்தியாசமான ஒரு உயிரினத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். அந்த வித்தியாசமான உயிரினம் தான் படத்திற்கு மிகப்பெரிய நெகடிவ்வாக உள்ளது. குறிப்பாக VFX காட்சிகள் மிகப்பெரிய சொதப்பல். ஹாலிவுட் தரத்தில் எடுக்க முயற்சி செய்திருந்தாலும் அது பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.
சக்தி சௌந்தர்ராஜன் இதற்கு முன்பு இயக்கிய மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிச்சம். கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு நல்ல விஷயம் உள்ளது என்றால் அது படத்தின் நீளம் மட்டுமே. ஹாலிவுட் படங்கள் கூட தற்போது 3 மணி நேரம் எடுக்கப்படும் நிலையில் இந்த படம் 2 மணி நேரம் என்பது சற்று ஆறுதல் தான். அதே நேரத்தில் கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒரு வித்தியாசமான முயற்சியை படக்குழு மேற்கொண்டுள்ளது என்பது பாராட்டக்கூடிய விஷயம் தான்.
-ம.பவித்ரா










