இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?… ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமே இலங்கைப் பொருளாதாரம் இயங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டு முதலே இலங்கையின் கடன்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டாலும் 2019ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சவின் அறிவிப்புகளே அந்நாட்டை பொருளாதார சிக்கலில் தள்ளியது.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வரிக்குறைப்பை அறிவித்தார் கோத்தபய ராகபக்ச. மதிப்புக் கூட்டு வரியை 15 சதவீதத்தில் இருந்து 8ஆக குறைத்த அவர், வணிக நிறுவனங்களுக்கான வரியையும் முற்றிலும் நீக்கினார். இதனால், சர்வதேச கடன்களுக்கான தர நிறுவனங்கள் இலங்கையின் மதிப்பை குறைத்ததால், அந்நாடு கடன் பெறுவது சிக்கலானது.
அதன் பின்பு, 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பேரிடர் இலங்கையின் சுற்றுலாத் துறையை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டது இலங்கை.
அந்நாட்டின் அந்நியச் செலாவணி குறைந்ததால், பணத்தின் மதிப்பும் குறைந்தது. 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அதிபரின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது.
2022ம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் பணவீக்கத்தின் அளவு இதுவரை கண்டிராத அளவு 11 புள்ளி 1 சதவீதமாக அதிகரித்தது. அந்நாட்டின் கடனும் 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால் உணவுப் பொருட்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், மார்ச் 31ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டில் கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலையை அறிவித்தார் கோத்தபய ராஜபக்ச. இருப்பினும், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்த மக்கள் ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, மார்ச் 9ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்ச.
இதைத்தொடர்ந்து அதிபர் கோத்பய ராஜபக்சவை பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிபர் கோத்பய ராஜபக்ச அதிபர் மாளிகையை விட்டு தப்போடியதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் இலங்கையைவிட்டு கப்பல் மூலம் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.









