நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் சார்பில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடத்தப்பட்ட வேண்டாம் போதை நிகழ்ச்சியில் மேயர், எம்எல்ஏ பங்கேற்று
மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும், பொதுநலமும் சார்ந்த செய்திகளை
தொடர்ந்து அன்பு பாலம் மூலம் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும்
ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் இந்த
மாதம் முழுவதும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு
வருகிறது. இதில் டிஜிட்டல் பார்ட்னராக daily hunt இணைந்துள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மூதறிஞர் ராஜாஜி பயின்ற பழமையான பள்ளியாக திகழும் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
“வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர்
கலந்து கொண்டு மாணவர்களுடன் “வேண்டாம் போதை” என்ற உறுதிமொழியும் மற்றும் இதைப் பற்றிய விழிப்புணர்வு உரையையும் வழங்கினார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய மேயர், இன்றைய நவீன நாகரிகத்திலும் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து பல வகைகளில் மாணவர்கள் அதற்கு அடிமைப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. குடி, புகையிலை போன்ற பயன்பாடுகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கலந்து போனதாக மாறிவிடாமல் நாளைய எதிர்காலமான மாணவர்களாகிய நீங்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு அரசியல் அறிவோடும் சமூக அக்கறையோடும் வளர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடியும். இந்த செயலை நியூஸ்7 தமிழ் அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குணம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் 1200 மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.








