ரூ.200 கோடியில் மருத்துவமனை; மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரூ.200 கோடியில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை அமைக்க நிதி கோரி புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய சுகாதார இணை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த மத்திய…

புதுச்சேரியில் ரூ.200 கோடியில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை அமைக்க நிதி
கோரி புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய சுகாதார இணை அமைச்சரிடம் முதல்வர்
ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்
பாரதி பிரவீன் பவார் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஜிப்மர் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் ரூ.200 கோடியில் கொரோனா தடுப்பு மற்றும்
தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை கட்டவும், ரூ.125 கோடியில் மாநில
சுகாதாரத்துறை மூலம் புற்று நோய் ஆராய்ச்சி சிகிச்சை மையம் அமைக்கவும் நிதி
வழங்க முதல்வர் ரங்கசாமி மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்
பவாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.


இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மாநில அரசின்
கோரிக்கையை ஏற்று உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மத்திய அமைச்சர் புதுச்சேரி சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் திருப்தி
அளிக்கும் வகையில் இருப்பதாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி சுகாதாரத்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.150 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், ஜிப்மர் மருத்துவமனைக்கு ரூ.1,350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் பாரதி பிரவின் பவார் பேட்டியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.