முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா தனது புதிய எஸ்யுவி வகை கார் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தியாவில், தற்போது மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதுப்புது வடிவமைப்பு, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என மேம்படுத்தப்பட்ட நடுநிலை எஸ்யுவி கார் மாடல்களை இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி கார் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த புதிய வகை எஸ்யுவி கார்களுக்கு “எலிவேட்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான், ஹோண்டா எலிவேட் காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த எலிவேட் கார்களில் சக்தியளிக்கும் விதமாக 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சிட்டி ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே எலிவேட் கார் மாடலிலும் இதே மைலேஜ் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவில் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய எஸ்யுவி கார் மாடல்கள் பிரபலமாக வலம் வந்துகொண்டுள்ளன. அந்த வகையில் ஹோண்டாவின் எலிவேட் மாடலுக்கு அந்நிறுவனம் சரியான விலையை நிர்ணயித்தால் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







