தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதையடுத்து போராட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரியும், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி, பிரசாந்த் பூசன், கோபால் சங்கரநாராயணன், விருந்தா குரோவர் உள்ளிட்டோர் ஆஜராகி, போராட்டத்தை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும், குறிப்பாக 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளது, வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை டெல்லிக்கு வெளியே நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று பொதுமக்களையும், மாணவர்களையும் காவல்துறை மிரட்டுவதோடு, ஓட்டல்கள், குருத்துவாராக்கள், மசூதிகளில் எவரையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதுபோல, 23 ஆயிரம் துணை ராணுவ படையினர் களம் இறக்கப்பட்டுள்ளதோடு, போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை கைது செய்து அடைப்பதற்காக 10 தடுப்பு முகாம்கள் அமைகப்பட்டுள்ளன, நகரில் இணைய சேவை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியதோடு, ஜனநாயக நாட்டில் அமைதியான போராட்டம் நடத்த குடிமக்களுக்கு உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, போராட்டம் என்ற பெயரில் அனுமதி இல்லாமல் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றால் நாங்கள் ஒரு நடவடிக்கை எடுக்கப்படும், நாடாளுமன்றம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது, அது இந்த தேசத்தின் அடையாளம். மேலும் இணைய சேவை 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட பின்னர் பேசிய நீதிபதிகள், அமைதியான வழயில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும், ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்தனர். அதேவேளையில், மொட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும், இது கவலைக்குரியது. எனவே கட்டுப்பாடற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம், ஆனால், அனைத்தையும் முடக்கி பொது மக்களுக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் செய்யக்கூடாது.
அதனால், மெட்ரோ மற்றும் பிற ரயில் சேவைகளை முறைப்படுத்தப்பட்ட முறையில் இயக்குவது குறித்து உரிய முடிவை எடுக்க வேண்டும், நகரின் ஒரு சாலை முடக்கப்பட்டால் மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும், இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவை உரிய முறையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.




