‘தூத்துக்குடி’ தென்மண்டலத்தில் உள்ள முக்கிய மாவட்டம்… கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி வ.உ.சிதம்பரனார் பெயரால் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேற்கே திருநெல்வேலியும், தொன்காசியும், கிழக்கே வங்காள விரிகுடாவும், வடக்கே ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும் அமைந்துள்ள அற்புதமான ஊர்..நீர் நிறைந்த நிலத்தை தூர்த்து, துறைமுகம், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் இந்த மாவட்டத்திற்கு தூத்துக்குடி என பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. வாகைக்குளம், கங்கை கொண்டான் கல்வெட்டுக்களில் இந்த ஊர் “தூற்றிக்குடி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர்களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர்கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்துவிட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்றுவிட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மது அலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார் என விக்கிபீடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது. கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு, பருத்திநூல், சென்னா இலைகள், பனைப்பொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10-வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளைக்கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியைச்சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குப்பாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெப்ப நிலையைக்கொண்ட பகுதியாகும். சிறிய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டபொம்மன், மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்களே. தூத்துக்குடி கடல் வாணிபத்திலும், முத்துக்குளிப்பதிலும் ஒரு மைய நகரமாய் விளங்கியிருக்கிறது. இதற்கு முன்பு கொற்கைதான். ஒரு கடல் துறைமுகமாக அமைந்து அங்குதான் அரேபிய வியாபாரிகள் தங்கள் குதிரை வியாபாரத்தை தங்கள் ஏஜெண்டுகள் மூலம் நடத்தி வந்திருந்தனர். தாமிரபரணி நதியின் முகத்துவாரத்தில் கொற்கை இருந்ததால், மணல்மேடுகள் விளைவாக கொற்கையின் முக்கியத்துவம் குறைந்து அதற்கு பதில் காயல் என்னும் துறைமுகம் தோன்றியது.

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்ப்புற வளாச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.
தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் உள்ளன. இதில் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா மற்றும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, பனிமய மாதா ஆலய திருவிழா உலக புகழ் பெற்ற திருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும் பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.

இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும். இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது. 1986-ல் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து எம்ஜிஆர், நெல்லை மாவட்டத்தை பிரித்து வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்று இதே நாளில் தூத்துக்குடியை தொடங்கி வைத்தார். இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், ஊராட்சி அமைப்புகளில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. முதலில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மாவட்டமாக செயல்பட்டது. தேர்தல் ஆனையம் தொகுதி வரைமுறைபடுத்தியதில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு மக்களவை தொகுதியும் இந்த மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் விரைவில் இங்கு ராக்கெட் ஏவுதளமும் அமையவுள்ளது.
வரலாற்றுக்கு பஞ்சமில்லாத தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலியில் இருந்து தனி மாவட்டமாக பிரிந்தாலும் இன்றளவும், இரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிரிவினை இல்லாமல் பழகிவருவது மேலும் சிறப்பு. வணிகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டம் தற்போது, மக்கள் போராட்டத்தால் மேலும் பெயர் பெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இங்கு நடந்த துப்பாக்கி சூடு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மேலும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த தூத்துக்குடி மாவட்டம் இன்று 36 ஆண்டுகள் வரலாற்றை பதிவு செய்து முன்னோக்கி நகர்கிறது…








