நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து லைன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர், மண்டபம் முகாமில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் முகாமில், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. லைன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கைத் தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கான துணை ஆட்சியர் சிவகுமாரி, இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலத்துடன் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான வேஷ்டி, சேலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மண்டபம் முகாம் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்கள் முகாமிற்கு சென்று, அனைவருக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என லைன்ஸ் இன்டர்நேஷனல் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் தேசத்தை பனைமர தேசமாக மாற்றும் நோக்கில் மணிமுத்தாறு மண்டலம் மற்றும் வைகை மண்டலம் இணைந்து குஞ்சார் வலசை கிராமத்தில் 50 ஆயிரம் பனை விதை நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பனை விதைகளை நட்டனர்.







