ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸை, மதிப்பு…

ARK சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

கடந்த பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸை, மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனமாக சினிமா பார்வையாளர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கு மற்றும் ஓடிடி தளம் என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது.

அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இணைந்த ‘சிவக்குமாரின் சபதம்’ மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி – ஹிப்ஹாப் தமிழா இணைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘வீரன்’ படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக ‘வீரன்’ அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியே இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.