இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் ‘தாய் மொழி’ உரிமையை அழிக்க
நினைக்கிறது மத்திய அரசு என சிபிஐயின் மாநில செயலாளர் முத்தரசன்
குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தி பேசாத மாநிலங்கள் – விரும்புகிற காலம் வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகவும்,
இணைப்பு மொழியாகவும் நீடிக்கும் என நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு
எதிரானதாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள மாநில மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க
வழக்கங்கள், உணவு, உடைகளில் பல்வேறு வகையான வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும் இந்திய ஒன்றிய ஒற்றுமையின் அச்சாணியாக ‘வேற்றுமையில் ஒற்றுமை பேணும் பண்பு’ தனித்துவம் கொண்டதாக விளங்கி வருகிறது.
இதற்கு எதிராக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் என்று பாஜக
ஒன்றிய அரசும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகளும் முழங்கிவருவது
நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து விளைவிக்கும் விபரீத செயலாகும்.
இதன்தொடர்ச்சியாக, அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசின்
உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்
அனைத்திலும் ஆங்கில மொழியை கைவிட்டு இனி இந்தி மொழி மட்டுமே பயன்படுத்த
வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரை உள்ளடங்கிய அலுவல் மொழிக்குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசின்
உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளார். அரசியல் சாசனத்தில்
அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின்
அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால்
வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து ‘இந்தி மொழியை திணிக்க
முயற்சிப்பதை கைவிட வேண்டும்’.
இந்தி மொழித் திணிப்பின் மூலம் மாநில மக்களின் ‘தாய் மொழி’ உரிமையை அழிக்க
நினைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசியல் அமைப்புச்
சட்டம் அங்கீகரித்துள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்க
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது