இந்துக்கள் வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்- உ.பி. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை!

இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களை உதைக்கப் போவதாகவும் உத்தரப்பிரதேசம் பிரிஜ் தாம் மடத்தின் தலைவரான துறவி யுவராஜ் மஹராஜ் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. …

இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களை உதைக்கப் போவதாகவும் உத்தரப்பிரதேசம் பிரிஜ் தாம் மடத்தின் தலைவரான துறவி யுவராஜ் மஹராஜ் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

உத்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணன் பிறந்த பூமியாக கருதப்படும் மதுரா, புனித நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ’பிரிஜ் தாம்’ எனும் மடத்தின் தலைவராக துறவி யுவராஜ் பதவி வகிக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் யுவராஜ் மஹராஜ் கூறியதாவது, ”இந்துக்கள் அனைவரும் தம்முடன் துப்பாக்கி அல்லது வாள் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காதவர்களை நான் ஒரு இந்துவாகவே கருத மாட்டேன். இதுபோன்ற இந்துக்களை நான் உதைக்கப் போகிறேன். அவர்கள் இந்துமதத்தில் இருக்கவே கூடாது.

தேவைப்படுவோர் வாள்களை தன்னிடம் விலைக்குப் வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.1,250 மட்டுமே, மேலும் பட்டியலினத்தவருக்கு சலுகையாக ரூ.800 விலையில் தருகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் துறவி யுவராஜின் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்பதால் செய்தியாளர்கள் அந்த துறவியை நேரில் சந்தித்து வீடியோ பற்றி கேட்டனர். அப்போது அவர் அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என உறுதிப்படுத்தி, இதற்காக தன்னை கைது செய்ய எவருக்கும் துணிவு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துறவி யுவராஜ் மீது சில புகார்களால், மதுரா காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் தவறு நடந்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிரைகன் பைஸன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.