சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற “விக்ரம்”திரைப்படத்தில் சிறப்புக் காட்சி ஒன்றில் வில்லனாகத் தோன்றி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், சூரியா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்படியிருக்க, அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இருவரும் இணைவது தள்ளிப்போனது.
இந்நிலையில் தான் சூரியா -சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங், ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற அதிக பொருட்செலவில் வெளியான படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான “யு வி கிரியேஷன் ”இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் இப்படத்தை எடுக்க அதிக செலவாகும் என்பதால் சிவா ‘ யு.வி கிரியேஷன் ’ நிறுவனத்தை அணுகி இருப்பதாகவும் இப்படம் ஒப்பந்தமாகும் பட்சத்தில் சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை “திஷா பதானி” நடிக்க இருக்கிறார். இசையமைப்பாள ”தேவி ஸ்ரீ பிரசாத்” இப்படத்திற்கு இசை அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளிவரும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.







