இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றிக்கு ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் முக்கிய காரணமாக அமைந்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்கள் வரை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரசுக்கு உறுதியான தேர்தல் வெற்றியை கொடுத்த இமாச்சல் பிரதேச மக்களுக்கு தாம் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த வெற்றியை கொடுத்துள்ளதாக கூறியுள்ள ராகுல்காந்தி, இதற்காக அவர்களுக்கு தாம் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகக் கூறினார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு விரைவாக காங்கிரஸ் நிறைவேற்றும் என ராகுல்காந்தி உறுதியளித்தார்.
இதற்கிடையே இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தால் ஏற்பட்டுள்ள எழுச்சியும் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என குறிப்பிட்டார்.







