இன்று நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அம்மாநிலத்தில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் 99சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் ஒன்றான இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை தொடங்கி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 7 ஆயிரத்து 881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
முதலில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக வாக்குப்பதிவு சுறுசுறுப்படைந்தது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷில்லாய் தொகுதியில் அதிகபட்சமாக 77 சதவீத வாக்குகள் பதிவாகின. தாஷிகாங் பகுதியில் 15,256 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் 98.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அங்குள்ள மக்கள் கடுங்குளிர் மற்றும் உறைபனியையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் ஜனநாயக கடமைகளை மேற்கொண்டனர்.
இமாச்சல் பிரதேச தேர்தலில் பதிவான வாக்குகள் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் வரும் டிசம்பர் 8ந்தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







