உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஆசியன் மாநாட்டில் ஆலோசனை- மத்தியமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆசியன் மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆசியன் என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் 10 உறுப்பு…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆசியன் மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஆசியன் என்றழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். அதில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகள் உள்ளன.

இந்த ஆண்டு ஆசியன்-இந்தியா உறவுகளின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் இன்று நடைபெற்ற ஆசியன்-இந்தியா உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், உக்ரைன் போர், அணு ஆயுத அச்சுறுத்தல் உள்ளிட்ட பலதரப்பு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் கூறியதாவது, ‘எங்களின் கலந்துரையாடலில் உக்ரைன் மோதல், உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் அணுசக்தி பிரச்சினைகள், உணவு தானிய முயற்சிகள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் விவாதித்தோம்’ என்று தெரிவித்தார்.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போரினால் உக்ரைன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா இந்த போரை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் பேச்சுவார்த்தையினால் மட்டுமே இந்த போரில் தீர்வு காண ஒரே வழி என்றும் ஏற்கனவே இந்தியா கூறியுள்ளது குறிப்பிட்டத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.