இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கங்ரா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தர்மஷாலா பகுதியில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சிம்லாவில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வெள்ள பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று இமாச்சல பிரதேச முதலமைச்சரிடம் கேட்டறிந்தார், மேலும் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு சார்பில் செய்து தருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இந்நிலையில், கங்ரா மாவட்டத்தில் கனமழையால் வீடுகள் மூழ்கின. அங்கு அமைந்துள்ள போ மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தொடர்ந்து மீட்பு பணிகளில் மும்புரமாக நடைபெற்று வருகிறது.








