23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் – குவியும் பாராட்டுகள்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயதேயான ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி…

திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயதேயான ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று, அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார். இடையில் அவருக்கு திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பை படித்து முடித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து, அதற்காக தீவிரமாக படித்து வந்தார்.

இதனிடையே அவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில், தேர்வு நடைபெறும் அன்றே அவருக்குக் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்வுக்கு இரண்டு நாள் இருக்கும் போது, அவருக்கு குழந்தை பிறந்த. இதனால் அவர் தேர்வு எழுதுவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், பிற ஆண்களைப் போல் குழந்தை தான் முக்கியம் என்று முடிவெடுக்காமல், தன் மனைவியின் கனவை நிறைவேற்ற முடிவு செய்த ஸ்ரீபதியின் இணையர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியை தேர்வுக்காக அழைத்து சென்றார்.

இந்த தேர்வு நடைபெற்று முடிந்து தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரீபதி வெற்றி பெற்று, பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தொடர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.