ஹிஜாவு நிதி நிறுவன மோசடி – முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில்  முக்கிய குற்றவாளிகள் இருவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும்…

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில்  முக்கிய குற்றவாளிகள் இருவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த
இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மோசடி செய்த மூன்று நிறுவனத்தை சேர்ந்த 15 பேரை, தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது. ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ். ஹிஜாவு ஆகிய 3 நிறுவனத்தைச் சேர்ந்த, இயக்குநர்கள், முக்கிய நிர்வாகிகளான 15 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

”சென்னையில் இயங்கி வந்த ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனமானது  பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டி அளிப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்து, சுமார் 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4,400 கோடி ரூபாய் வரை வசூல் செய்தும் அதன்பின்பு முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை

இவ்வழக்கில் ஏற்கனவே HIJAU நிறுவனத்தின் தலைவர் சௌந்தரராஜன், இயக்குநர்கள் நேரு, செல்வம், சுரேஷ், சந்திரசேகரம் பிரிஸிட்லா, கமிட்டி மெம்பர்களான குருமணிகண்டன், முகம்மது ஷெரீப், சாந்தி பாலமுருகன், கல்யாணி, பாரதிரவிச்சந்திரன், சுஜாதா பாலாஜி மற்றும் HJHU தலைமையலுவலகத்தின் பொதுமேலாளர் சுஜாதா ஆகியோர் கைது செய்யப்பட்டுவிட்டனர்.

தற்போது மற்றொரு இயக்குநரான கலைச்செல்வி மற்றும் அவரது கணவரும் HIJAU நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், மேலாண் இயக்குநருக்கு நெருக்கமான ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் 31.03.2023-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் 2019-ம் ஆண்டே HIJAU நிறுவனத்தில் இணைந்து அதை Multi Level Marketing business ஆக மாற்றி அதன் மூலம் அதிக முதவீடுகளை திரட்ட மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், தலைவர் சௌந்தரராஜன் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இவர் தனது பெயரில் RMK Bros என்ற பெயரில் துணை நிறுவனம், சென்னை அண்ணாநகர் மேற்கில் ஆரம்பித்து ரூ.300 கோடி வரை முதலீடுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்று HIJAU நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் ரூ. 1 கோடி வரை கிடைத்த கமிஷன் தொகை மூலம் இரண்டு சொகுசு கார்கள், ரூ. 5 கோடி மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நிலம் , ரூ. 2 கோடி மதிப்பில் தேவகோட்டையில் நிலம் மற்றும் காரைக்குடியில் வீடு கட்டியுள்ளார். அதற்கான ஆவணங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இவரது மனைவியும், HIJAU நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கைதுசெய்யப்பட்ட கலைச்செல்வி தனது கணவருக்கு எல்லாவகையிலும் உதவியாக இருந்துவந்துள்ளார்.

இவ்வழக்கில் முக்கிய நபர்களான மேலாண்மை இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவியும் முன்னாள் இயக்குநருமான மகாலட்சுமி, நிறுவனங்களின் உரிமையாளர்கள், முக்கிய ஏஜென்ட்களை பிடிக்க தனிப்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் இதுவரை சுமார் 13,000 புகார்மனுக்கள்  வரப்பெற்றுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விரைவில் தங்கள் புகார்களை சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.