உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும் வார்டுகள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பதில் அளிக்க திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, முதல்கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 7-ம் தேதி வரை கால அவ காசம் உள்ளதால், அதில் தலையிடவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உள் ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீற முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.







