உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க அரசாணை-இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் நியமிக்கப்படும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசில்…

செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் நியமிக்கப்படும் உதவி மக்கள் தொடர்பு
அலுவலர்களை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க வகை செய்யும்
அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி நியமனம் தொடர்பாக, ஆகஸ்ட் 1ம்
தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக உரிய கல்வி தகுதியுடன்
டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யபட்டு பணியமர்த்தபடுவர் என
குறிப்பிடபட்டிருந்தது.

பட்டபடிப்பு மற்றும் குறைந்தது 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அலுவலராக
பணியாற்றிருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் உதவி மக்கள் தொடர்பு
அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை நியமிக்க தடை கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சீனிவாச மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தற்காலிக அடிப்படையில்
நியமிக்கப்பட்டு, பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற நிலையில், தற்காலிக
பணி நியமனத்தை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ள முடியாது
என்பதால், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனத்தை செய்தி மக்கள் தொடர்புதுறை
மூலம் உரிய கல்வி தகுதியின் அடிப்படையில் நேரடி நியமனமாக நியமிக்க
உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்
தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தற்காலிக பணி நியமனத்திற்கு குறிப்பிட்ட பட்டபடிப்பு அவசியமில்லை எனவும், தற்காலிக பணி நியமனத்தை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ள முடியாது எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு
வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடைவித்த நீதிபதி, வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.