முக்கியச் செய்திகள் சினிமா

அலட்ரா ஆக்ஷன் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா!

உலகளவில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக, Bruce Lee, Jet Li, Jackie Chan, Tony Jaa, arnold, Sylvester Stallone உள்ளிட்டோர்கள் ஆக்ஷன் பட உலகின் முடிசூடா மன்னர்களாக கருதப்படுகிறார்கள். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவும் தன் பங்கிற்கு அதிகளவில் ஆக்ஷன் ஹீரோக்களை வழங்கியுள்ளது. அவர்களில் அல்ட்ரா ஆக்ஷன் ஹீரோக்கள் வெகு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர், நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா.

அசுர வேகத்தில் பயணிக்கும் ரயிலை பைக்கில் சென்று ஓவர்டேக் செய்வது, ஒற்றை விரல் அசைவில் ரயிலையே திருப்பி அனுப்புவது, துப்பாக்கியால் சுட்டு விமானத்தையே வீழ்த்துவது, ஜெயில் கம்பிகளை வெறும் கையாலேயே வளைப்பது என, அவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள், ஆந்திராவை தாண்டியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான என்டி ராமாராவ்வின் மகன் என்ற அடையாளத்துடன் பாலகிருஷ்ணா தொடக்கத்தில் திரையுலகில் நுழைந்திருந்தாலும், தனது கடின உழைப்பு காரணமாகவே இந்தியா சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார்.

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திராவின் அசைக்க முடியாத நடிகராக உருவெடுத்தது எப்படி? ஆக்ஷன் காட்சிகளும், அதிரடி வசனங்களும் அவரது வெற்றிக்கு எவ்வாறு உதவின?சர்ச்சைகள் நிழல் போல் அவரை தொடர்ந்து வந்தாலும், அதையெல்லாம் கடந்து சினிமாவில் சாதித்தது எப்படி? ஆந்திர அரசியலில் அவரது பங்களிப்பு என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கும் விடை காண்பதன் மூலம், பாலகிருஷ்ணா என்ற திரையுலக ஆளுமை குறித்து முழுமையாக புரிந்துகொள்ள முடியும்..

என்.டி.ஆர்…. தெலுங்கு சினிமாவில் இந்த மூன்றெழுத்து ஏற்படுத்திய அதிர்வலை மிகப்பெரியது. 1949ம் ஆண்டு மனதேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, திரையுலகோடு மட்டும் நின்றுவிடாமல் அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கினார் என்.டி.ஆர் என்கிற நந்தமூரி தாரக ராமா ராவ். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.

இவருக்கும் – பாசவ தரகம் அம்மாளுக்கும் 1960ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி 6ஆவது மகனாக பிறந்தவர் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தென்னிந்திய திரையுலகம் அப்போதைய மெட்ராஸை மையமாக கொண்டு இயங்கிய காலகட்டம் அது. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த என்டி.ஆ.ர் தன் குடும்பத்தினரோடு மெட்ராஸ் வந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் அனைவரும் மெட்ராஸில் இருந்த பள்ளிக்கூடங்களிலேயே கல்வி கற்றனர். பாலகிருஷ்ணாவுக்கும் அப்படித்தான் வாய்த்தது. பின்னர் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தெலுங்கு திரையுலகம் ஹைதராத்திற்கு மாறிய போது, என்டிஆர் குடும்பமும் ஹைதராபாத்திற்கு குடியேறியது. பாலகிருஷ்ணாவுக்கு ராமகிருஷ்ணா, ஜெயகிருஷ்ணா, சாய்கிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகனகிருஷ்ணா உள்ளிட்ட 6 சகோதரர்களும், கரபதி லோகேஸ்வரி, டகுபதி புரந்தஸ்வரி, நரபுவனேஸ்வரி, உமா மகேஸ்வரி என்ற 4 சகோதரிகளும் இருந்தனர்.

1974ஆம் ஆண்டு என்டிஆரின் பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோவின் தயாரிப்பில் என்டிஆர் கதை வசனம் எழுதி இயக்கிய Tatamma Kala திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பாலகிருஷ்ணனா. அதன் பிறகு கிட்டதட்ட 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். ஆனால், கதாநாயகனாக எந்த படத்திலும் அறிமுகமாகவில்லை. இதனிடையே, 1982ஆம் ஆண்டு தன்னுடைய 22ஆவது வயதில் ஐதராபாத் நிஜாம் கல்லூரியில் பிகாம் படிப்பை முடித்தார். 2 ஆண்டுகள் கழித்து சந்தான பாரதி மற்றும் பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையில் சஹசமே ஜீவிதம் ((Sahasame Jeevitham)) என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தின் மூலம்தான் ஹீரோவாக களமிறங்கினார் நந்தமுரி பாலகிருஷ்ணா.

சஹசமே ஜீவிதம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால், அந்த ஆண்டில் மட்டும், அதாவது 1984ல் மட்டும் 7 படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தினார். அடுத்த ஆண்டு 6 படங்கள், அதற்கு அடுத்த ஆண்டு 7 படங்கள், அதற்கு அடுத்த ஆண்டு 8 படங்கள் என ஒவ்வொரு ஆண்டும் அவரது கேரியரில் புதியப்படங்களும், அதிகப் படங்களும் வெளியாகி கொண்டிருந்தன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஆண்டுக்கு சராசரியாக அரை டஜன் படங்களில் நடித்து ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா.

அதே காலக்கட்டத்தில்தான் தமிழ் திரைத்துறையுலகில் விஜயகாந்த், மோகன் போன்றவர்கள் வளர்ந்து வந்தனர். ஆனால், விஜயகாந்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கும், பஞ்ச் டயலாக்குகளுக்கும் தமிழ்நாட்டில் ஏக வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட விஜயகாந்தின் பாணியையே தெலுங்கில் பாலகிருஷ்ணாவும் பின்பற்றியதாக கூறப்படுகிறது.

அறிவியலுக்கு சவால் விடும் வகையிலான ஸ்டண்ட் காட்சிகளும், திரையரங்கை அதிர செய்யும் பஞ்ச் வசனங்களும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தன. குறிப்பாக, “கோகோ கோலா பெப்சி, பாலய்யா பாபு செக்ஸீ”. “மாஸா ஃப்ரூட்டி பாலையா பாபு நாட்டி”. “ஏஎம் பிஎம், பாலய்யா பாபு சிஎம்”. “1234, பாலையா பாபு நெவர் பிஃபோர்”. “ஸ்மோக்கிங் ஈஸ் இஞ்சூரியஸ், பாலையா பாபு இஸ் டேஞ்சரஸ்”…. போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. அதிரடி காட்சிகள், ஆவேசமான வசனங்களுக்கு அடுத்தபடியாக குறிப்பிட வேண்டிய ஒன்று, பாலகிருஷ்ணாவின் நடனம். நரசிம்ம நாயுடு படத்தில் அவர் ஆடிய கிளாசிக்கல் நடனம், இன்று வரையும் யூடியூப்பில் அதிக வியூஸ்களை அள்ளி வருகிறது.

தான் நடிக்கும் படங்களில், தன் ரசிகர்களுக்கும் சரி, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் சரி, பாலகிருஷ்ணா தீனி போடாமல் இருந்ததில்லை. 1974 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலகிருஷ்ணாவின் திரைப்பட்டியலில், மங்கமாகரி மனவாடு ((Mangammagari Manavadu)), முத்துலா மவய்யா ((Muddula Mavayya)), நரிநரி நடும முராரி ((Nari Nari Naduma Murari)), லாரி ட்ரைவர் ((Lorry Driver)), ரவுடி இன்ஸ்பெக்டர் ((Rowdy Inspector)), ஆதித்யா 369, பைரவ தீபம், சமர சிம்ஹ ரெட்டி, நரசிம்ம நாய்டு, சிம்ஹா, லெஜண்ட் உள்ளிட்ட படங்கள் பளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. சில படங்கள் ஹிட், சில படங்கள் ஆவரேஜ் என இருந்தாலும், பட்டியலில் பெரும்பான்மை இடத்தை பிடிப்பது Flop படங்கள்தான். இருந்தாலும், தன் திறமைக்காக பாலகிருஷ்ணா பெற்ற திரைத்துறை விருதுகள் ஏராளம். நரசிம்ம நாயுடு, சிம்ஹா, லெஜண்ட் திரைப்படங்களுக்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகருக்கான நந்தி விருதை 3 முறை பெற்றார். இதேபோன்று 3 முறை DSR தேசிய விருதும், சைமா விருது ஒருமுறையும், ஃபிலிம்ஃபேர் விருது ஒரு முறையும் என விருதுகளின் பட்டியலும் நீள்கிறது.

பாலகிருஷ்ணாவுக்கு திரைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் ஆர்வம் இருந்தது. என்டிஆர் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், அப்போது காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் மூன்றாவது மகள் புவனேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்தார் என்பதை தவிர, அவருக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை. ஆனால், பாலகிருஷ்ணாவுக்கு அப்படி இல்லை. தன் தந்தையின் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்ட 6 மாதங்களில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பொதுமக்களிடையே செல்வாக்கு கொண்டிருந்த கட்சியாக அது இருந்தது. தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தார் நந்தமுரி பாலகிருஷ்ணா. கட்சி ஆரம்பித்ததும் என்டிஆர் ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் செய்தபோது, அவருடன் சேர்ந்து கட்சிக்காக அவரும் பிரச்சாரம் மேற்கொண்டார். நடிகராக அறிமுகமாகி மக்களிடம் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், எல்லா தேர்தல்களிலும் தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரச்சாரமும் செய்தார்.

ஒரு சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்காக கிழக்கு கோதாவரி பகுதியில் பாலகிருஷ்ணா தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தார். அது அந்த கட்சிக்கு நல்ல பலனை அளித்தது. கிழக்கு கோதாவரி தொகுதிகளில் பெற்ற வெற்றி தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்க உதவியது. இதனை கேள்விப்பட்ட என்டிஆர், கிழக்கு கோதாவரி தொகுதிகளில் பெற்ற வெற்றி எனது வெற்றி அல்ல, முழுக்க முழுக்க பாலகிருஷ்ணாவின் வெற்றி என மனந்திறந்து குறிப்பிட்டார். கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கட்சிக்காக உழைத்திருந்தாலும், எந்த தேர்தலிலும் பாலகிருஷ்ணா போட்டியிடவில்லை. 2008ஆம் ஆண்டில் இருந்து பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் இறங்க போகிறார் என்ற செய்தி அவ்வபோது வெளிவந்தாலும், அவர் நேரடி அரசியலில் இறங்கியது 2013ம் ஆண்டுக்கு பிறகுதான். 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாலும், ராஜசேகர ரெட்டியின் மகன் காங்கிரசில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியதாலும், 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிர்ஷ்ட காற்று தெலுங்கு தேசம் கட்சி மீது வீசியது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் பாலகிருஷ்ணா.

தன் தந்தை என்டிஆர் பிறந்த தொகுதியான குந்திவாடா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் தொகுதியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளராக அவர் களமிறங்கினார். 1985ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டார் தொகுதி அது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்டிஆர் 3 முறையும், நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஒருமுறையும் வெற்றி பெற்றது அந்த தொகுதியில்தான். இருந்தபோதும், பாலகிருஷ்ணா வெற்றிப்பெற வாய்ப்புகள் குறைவுதான் என பேச்சுகள் அடிபட்டன. எனினும், அந்த தேர்தலில் YSR காங்கிரசின் நவீன் நிசாலை விட 16,196 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்று காட்டினார் பாலகிருஷண்னா. தேர்தலில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், தொகுதியின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆந்திர மாநிலத்தின் தொழிற்சாலை நகரமாக இந்துபூர் தொகுதியை மாற்றும் பணிகளை முடுக்கி விட்டார். அனந்தபூர் மாவட்டத்தின் பெறும் பிரச்னை வறட்சிதான். போதிய அளவு தண்ணீர் இல்லாததால், விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் விதமாக HNSS திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இந்துபூர் தொகுதியின் தண்ணீர் தேவையை அவர் பூர்த்தி செய்தார். பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே உள்ள தொகுதி என்பதால், தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

1982ஆம் ஆண்டு SRM ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரின் மகள் வசுந்தரா தேவியை திருமணம் செய்து கொண்டார் பாலகிருஷ்ணா. இவர்களுக்கு Brahmani, Tejaswini என்ற இரு மகள்களும், Mokshagna Teja என்ற ஒரு மகனும் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ்-க்கு Brahmani-யை திருமணம் செய்துகொடுத்து ஆந்திர முதலமைச்சரின் சம்மந்தி என்ற கூடுதல் அந்தஸ்தையும் பெற்றார் பாலகிருஷ்ணா. பாலகிருஷ்ணாவின் பட வரிசை பட்டியலை போலவே, அவர் சிக்கிய சர்ச்சைகளின் பட்டியலும் பெரியது. இயல்பிலேயே எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய சுபாவம் கொண்டவர் பாலகிருஷ்ணா. கடந்த 2004ஆம் ஆண்டு ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டில் திரைப்பட தயாரிப்பாளர் வெல்லங்கொண்டா சுரேஷ் மற்றும் அவரது உதவியாளர் சத்ய நாராயண சவுத்ரி உடனான வாக்குவாதம் முற்றி இருவரையும் துப்பாக்கியால் சுட்டார் பாலகிருஷ்ணா.

ஆன்மிக நம்பிக்கையில் அதீத நாட்டம் கொண்ட பாலகிருஷ்ணா, வெல்லாங்கொண்டா சுரேஷ், சத்ய நாராயண சவுத்ரி ஆகியோர் சொல்வதன் அடிப்படையில் விழாக்களுக்கு செல்வது, புதிய படங்களில் ஒப்பந்தமாவது என அனைத்திற்கும் இருவருடனும் கலந்தாலோசித்து முடிவெடுப்பது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் முறைகேடுகளில் ஈடுபட்டது பாலகிருஷ்ணாவுக்கு தெரிய வர, அதன் பிறகான வாக்குவாதத்தில்தான் இருவரையும் அவர் சுட்டார் என கூறப்படுகிறது. இவரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அபோலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரையும் தன் மனைவி வைத்திருந்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக பாலகிருஷ்ணா மீதும், துப்பாக்கியை அஜாக்கிரதையாக பயன்படுத்தியதற்காக அவரது மனைவி மீதும் வழக்குகள் பதியப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்டு சில நாள் சிறையில் இருந்தார் பாலகிருஷ்ணா. இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக தலையிட்டு கண்டனங்களை தெரிவித்ததோடு, ஆந்திர அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

பின்னர் ஆந்திராவை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாலகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி பாலகிருஷ்ணா மற்றும் அவரது மனைவி வசுந்தரா தேவியை விடுதலை செய்தது நீதிமன்றம். இருவரும் சாட்சியங்கள் இல்லாமல் விடுதலை ஆனதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாவித்ரி பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா, ”நான் பெண்களை சீண்டும் படங்களில் நடித்தால், ஒன்று அவர்களை முத்தமிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்பமாக்க வேண்டும். இல்லை என்றால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என பேசினார். இந்த பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பு செய்தியானது. நடிகராகவும், எம்எல்ஏவாகவும் இருப்பவர் பெண்களை பற்றி இப்படி பேசலாமா என்று பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஜா, பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

நிலைமை தீவிரமானதை உணர்ந்த தெலுங்கு தேசம் கட்சி, பாலகிருஷ்ணா பெண்களை மிகவும் மதிக்கக்கூடியவர், அவர் பெண்களை தனது குடும்ப உறுப்பினர் போலத்தான் பார்க்கிறார். தனது பேச்சுக்காக பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்பதாக, கட்சி சார்பில் அறிக்கை வெளியானது. ரசிகர்களை சந்திப்பதிலும் சரி, கட்சியினருடன் இணக்கமாக இருப்பதிலும் சரி, என்டிஆர் போல பாலகிருஷ்ணா இல்லை. சினிமா ஷூட்டிங்கின்போதும், விழாக்களின் போதும் பாலகிருஷ்ணாவிடம் அறை வாங்கியவர்கள் ஏராளம். அமெரிக்காவில் ரசிகரை அறைந்தது, ஷூ லேசை ஒழுங்காக கட்டாததால் உதவியாளரை அடித்தது, செல்ஃபி எடுக்க முயன்ற தொண்டரை அறைந்தது, ஆந்திர முதலமைச்சரின் இருக்கையில் அமர்ந்தது என இந்த பட்டியல் நீள்கிறது. அண்மையில் கூட குழந்தை ஒன்றை அவர் அடித்த வீடியோ வைரல் ஆனது. ஏ.ஆர்.ராகுமானா? யார் அவர்? அவரை எனக்கு தெரியாதே என்று கூறி ட்ரோல் செய்பவர்களையே வாய் பிளக்க வைத்த அவர், பாரத ரத்னா விருதெல்லாம் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

பிற மாநிலங்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரால் பாலகிருஷ்ணாவின் படங்கள் கிண்டல் செய்யப்பட்டாலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அவருக்கு உள்ள ரசிக பட்டாளமே தனி. அந்த மாநிலங்களில் உள்ள திரையரங்கில் அவரின் படத்தை பார்த்தவர்களால் இதனை எளிதில் உணர முடியும். உதாரணமாக, பாலகிருஷ்ணாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அகண்டா. பாலகிருஷ்ணாவின் முந்தைய வெற்றிப்படங்களான சிம்ஹா, லெஜண்ட் போன்ற படங்களை எடுத்திருந்த போயபட்டி ஸ்ரீனு இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தமிழ்நாட்டில் சிலர் காலாய்த்துக்கொண்டிருந்த நேரத்தில், உலகம் முழுவதும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் படம் வெளியானபோது, ரசிகர்கள் பரவசத்தால் ஜெய் பாலய்யா, ஜெய் பாலய்யா என கூச்சலிட தொடங்கினர். இதனால், படத்தை சிறிது நேரம் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அளவுக்கு அவருக்கு die hard fans உள்ளனர்.

பாலகிருஷ்ணாவுக்கு தமிழ்நாட்டின் மீது எப்போதுமே தனி ப்ரியம் இருந்து வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை பதிவு செய்ய அவர் தவறியதில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இவ்வாறு கூறினார். ” நான் பொறந்தது வளர்ந்தது இந்த மண்ணுலதான்.. தமிழ் தண்ணிய குடிச்சு வளர்ந்த ஒடம்பு இது. என்னோட பெரியப்பா எம்ஜிஆர், சித்தப்பா சிவாஜி இருந்த நாடு இது” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரால் கலைப்படங்களில் கூட நடிக்க முடியும் என்றாலுமே கூட, தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தொடர்ந்து மசாலா திரைப்படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாலகிருஷ்ணா ஆளாகி வருகிறார். அத்துடன், அவரது முன்கோபமும் பல நேரங்களில் அவரை சர்ச்சைக்குள் சிக்கவைத்து விடுகிறது. கோபத்தை தவிர்த்து, கொஞ்சமேனும் கலையம்சம் கொண்ட படங்களில் நடித்து, ரசிகர்களுடன் மேலும் அணுக்கமாக இருக்க தொடங்கினால்,, என்டிஆரை போலவே பாலகிருஷ்ணாவும் நூற்றாண்டுகளை கடந்தும் பேசப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Gayathri Venkatesan

கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு

EZHILARASAN D

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்

EZHILARASAN D