அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது வழக்கு பதியாமல் இருக்க ரூ.6 கோடி பேரம்….. லஞ்சம் வாங்கச் சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை வளையத்திற்குள் சிக்குவாரா…? விரிவாக பார்க்கலாம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், பால்பண்ணை உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வந்தனர். தங்கள் பால் பண்ணையில் கறந்த பாலை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று விற்பனை செய்யத் தொடங்கியதால் மிகவும் பிரபலமானார்கள். சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.
தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என கூறி வணிகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னது போலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தொடங்கினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்ததால் புகார்கள் எழத் தொடங்கின. முதலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ் பானு தம்பதி, தங்களிடம் சகோதரர்களான கணேஷ், சுவாமிநாதன் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, 2021ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ்,சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
சகோதரர்களின் தயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஜாமீனில் வந்த கணேஷ் கோவையில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கிருந்தார். பூதலூர் காவல் நிலைய எஸ்.ஐ.யாக இருந்த கண்ணன், 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜுக்கு சென்று கணேஷிடம், “உங்கள் மீது கும்பகோணம் பகுதியை சேர்ந்த ரகுபிரசாத் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் தராமல் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளனர் என்றும், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும்” கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், எஸ்.ஐ. கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு ரூ. 1 கோடியும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்க 5 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.6 கோடி பணம் தர வேண்டும் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என்று கோரியுள்ளனர். தன்னிடம் மொத்தமாக ரூ.10 லட்சம் கையில் இல்லை என கணேஷ் கூறியதும் முதலில் ரூ.5 லட்சமும், 10 நாட்களுக்குள் மீதி ரூ.5 லட்சமும் தர வேண்டும் என கூறியுள்ளனர். கணேஷும் பணம் தருவதாக ஒப்புக்கொண்டதும் 2 காவலர்களை லாட்ஜில் தங்க வைத்து பணம் தரும்வரை கண்காணிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
கணேஷ் தன்னுடைய நிறுவனத்தின் பொது மேலாளர் மூலம் தஞ்சை வங்கியிலிருந்து ஏப்.19ம் தேதி 5 லட்சமும், 29ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரம், கண்ணன் இருவரிடமும் கொடுத்துள்ளார். இதன் பின்னர் வேறு வழக்குகளில் கணேஷ் சகோதரர்கள் கைதான போது மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் தன்னிடம் ஆய்வாளர் சோமசுந்தரமும், எஸ்.ஐ.கண்ணனும் ரூ10 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கியது குறித்து வாக்குமூலம் கொடுத்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து விசாரணையில் தெரிய வந்ததும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள ஓட்டலுக்கு கணேசின் மேலாளரான ஸ்ரீகந்தன், ஆய்வாளர் சோமசுந்தரம் அனுப்பிய நபரிடம் பணத்தை கொடுத்தது உறுதியனது. இதையடுத்து ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் எஸ்.ஐ. கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் சோமசுந்தரம் தற்போது பந்தநலூர் காவல் நிலையத்திலும், எஸ்ஐ கண்ணன் திருவாரூர் காவல் நிலையத்திலும் பணியாற்றி வருகின்றனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் 2 பேரும் சஸ்பெண்டு ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேரின் வீடுகள் சோதனை நடத்தவும், 2 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் ஐபிஎஸ் அதிகாரி லஞ்சம் கேட்க சொன்னதாக குறிப்பிட்டுள்ளது. அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்திற்குள் ஐபிஎஸ் அதிகாரியும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











