ரஷியாவில் கடும் பனிப்பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ரஷியாவில் கடும் பனிபொழிவால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 146 ஆண்டுகளில் ரஷியாவில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பனியால், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரை வரை பனி படர்ந்துள்ளது. கடும் பனிப்பொழிவால் தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை சேர்ந்துள்ளது.

மேலும் உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் மலை போல் பனி குவிந்துள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாகப் புதைந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.