இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இது குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 488 நிவாரண மையங்களில் 43,925 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே டிட்வா புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. இதையடுத்து ஆபரேசன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியுள்ளது.








