தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடலலில் இலங்கையை ஒட்டிய பகுதியிலில் வரும் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, கர்நாடகா பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







