உதகையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கி காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. உதகையில் இன்று காலை முதல் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவி வருகிறது. உதகையிலிருந்து குன்னூர், கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.
அதேப்போல் இரவு பெய்யக்கூடிய மழையின் காரணமாக அதிகாலை நேரங்களில் நகர்புற பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த நவம்பர் 15ம் தேதிக்கு மேல் நீர்ப்பனி மற்றும் உறைபனி பொழிவு காணப்பட்ட நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து, கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால் நகர்புற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்பட்டு
வெறிச்சோடி காணப்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் உதகையிலிருந்து குன்னூர், கோத்தகிரி செல்லும் மலைப்பாதை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.







