கொரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசி பற்றிய விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் மத்திய அரசின் கோவின் இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் கூகுள் சர்ச், மேப்ஸ், அசிஸ்டன்ட் உள்ளிட்ட தனது பிரிவுகளுக்கு சென்றால் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காணும் வசதியை இந்நிறுவனம் வழங்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
அதன்படி இப்போது, கூகுள், கோவின் செயலியுடன் இணைந்து, தடுப்பூசி தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வாரத்தில் இவ்வசதி செயல்பாட்டிற்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுளில் உள்ள சர்ச், மேப்ஸ், அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் நாட்டில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்களின் விவரங்களை உடனுக்குடன் அறியலாம். இந்த மையங்களில் கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்து விவரங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளோர் தகவல்கள் ஆகியவற்றையும் காணலாம். இந்த வசதியை, ஆங்கிலத்துடன், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட எட்டு மொழிகளில் கூகுள் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.







