விஜய் டிவி புகழ் ராமர் காமெடி நடிகர் மட்டுமல்ல; ஓர் அரசு அதிகாரியும் கூட என்பது இப்போது தெரியவந்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன், தனது டுவிட்டர் பக்கத்தில் ராமருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார். அந்தப் பதிவில், “இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின்போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய் டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவின் மூலமாக தான், ராமர் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் கிராம நிர்வாக அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
மதுரையில் பிறந்த ராமர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். சன் டிவியில் ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சியில் 2005ம் ஆண்டு பங்கேற்றார்.
அதன்பிறகு, விஜய் டிவியில் 2007ம் ஆண்டு ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க, அவரது வாழ்க்கை ஏறுமுகம் காணத் தொடங்கியது. பின்னர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சன் டிவியின் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் அசத்தல் மன்னன் விருதை வென்றார். அது அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரமாக இருந்தது. அதன் பிறகு, ‘அது இது எது’ நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் விஜய் டிவிக்கு வந்த ராமரின் காமெடி நிகழ்ச்சிகள் பட்டித்தொட்டியெங்கும் சென்று சேர்ந்தது. குறிப்பாக இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் நகைச்சுவை கலைஞராக ராமர் மாறினார்.
“என்னம்மா இப்படி பண்றீங்களே மா” என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற பாடலின் முதல் வரியாகக் கூட இந்த வசனம் எழுதப்பட்டது. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். ஜெயம் ரவி நடித்த கோமாலி, சிக்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ராமர் நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பணிபுரிந்து கொண்டே அரசுத் தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராகவும் இவர் பணிபுரிந்து வருவது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.








