உணவகங்கள் சேவைக் கட்டணங்கள் வசூலிப்பது சட்ட விரோதமாகும். இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங், இந்திய உணவக சங்கத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார் அளித்தனர். நுகர்வோரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும். இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. பில்லில் இருந்து சேவைக் கட்டணத்தை நீக்குமாறு நுகர்வோர் கோரினால் அவர்களை கட்டாயம் அந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. தினமும் இதுபோன்ற புகார்கள் வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் உணவகங்கள்/ஹோட்டல்கள் ஆகியவற்றில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








