பாடல் வரிகளுக்கேற்ப எங்கிருந்தோ அல்ல… பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் எஸ்.வி. ரங்காராவ். ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய் கதாநாயகன்களை ஓரங்கட்டிய ஜாம்பவான் அவர்…பாதாள பைரவி, மாயாபஜார், படிக்காத மேதை, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் மறக்க முடியாத நடிப்பைத்தந்தவர் எஸ்வி. ரங்காராவ்.
இளமையிலே விழுந்த முன் வழுக்கை, கனத்த சரீரம், முதுமை தோற்றமுடையவராக இருந்த ரங்காராவுக்கு தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் 1951ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி திரைப்படம் அடித்தளமிட்டது. 1957ல் வெளியான மாயா பஜாரில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ், இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகராகி விட்டார். ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒற்றை ஆளாக சாப்பிடும் அந்த, ‘’ கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’’ என்ற பாடல் மறக்க இயலாது.
நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இயக்குநராக தோன்றி சிரிக்கவைத்த எஸ்.வி ரங்காராவ், இந்தக் காலத்தை பிரதிபலிக்கும் வகையில் உரையாடல்களை நடித்துக் காட்டியிருப்பார்… தமிழில் கடைசியாக 1974ல் நடித்த அன்புச் சகோதரர்கள் படத்தில் ‘’முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’’ என பாடி குணச்சித்திர நடிப்பால் கண்கலங்க வைத்துவிட்டுத் தான் போனார் ரங்காராவ்.
இளவயதில் முதியவர் வேடங்களை ஏற்கத் தொடங்கிய ரங்காராவ், இறக்கும் போது வயது 56தான்..அந்தக்கால குணச்சித்திர நடிகர்கள் டி.எஸ்.பாலையா 58 வயதிலும், எஸ்.வி.சுப்பையா 57 வயதிலும் மறைந்தார்கள். ஆந்திர மக்களால் விஸ்வநட சக்கரவர்த்தி அதாவது நடிப்பு உலகின் அரசர் என்று கொண்டாடப்பட்ட ரங்காராவ், நடித்தார் என்பதைவிட, திரைப்படங்களில் வாழ்ந்து விட்டுப் போனார் என்பதே உண்மை…









