ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் குருகிராமில், கடந்த ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 31ஆம் தேதி அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ எனும் பெயரில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி குருகிராம் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்களையும் சென்றடையும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணியை குருகிராம் பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கிவைத்தார்.
பேரணியானது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நுாஹ் மாவட்டத்தை சென்றடைந்த போது சிலர் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊர்வலக்காரர்களை நோக்கி கற்களை வீசியதாகவும் இதனையடுத்து பேரணி நடத்தியவர்களும் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து வன்முறை நீடித்த நிலையில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் , பைக்குகள் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது.காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் , தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் காவலர்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இதுவரை ஊர்க்காவல்படையைச் சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் , குருகாம் அஞ்சுமான் மசூதியின் துணை மதகுரு முகமது ஹாபிஸ் சயீத் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளன. 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் 8 காவல் துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பெண்கள் குழந்தைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
மேலும் ஹரியானா மாநிலத்தில் கலவரம் நிகழ்ந்த நுஹ், பரிதாபாத் மற்றும் பல்வால், குருகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளன. இதுவரை ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக நுஹ்வில் 46, குருகிராமில் 23 உட்பட 5 மாவட்டங்களில் மொத்தம் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை தொடர்பாக 93 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









