கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மாரத்தான் போட்டி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். 9 பிரிவுகளில் சுமார் 10 லட்சம் மத்திப்பிலான பரிசுகளை அவர் வழங்கினார். மாரத்தானில் பங்கேற்ற ஆயிரத்து 63 திருநங்கை, திருநம்பிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் போல் எந்த அமைச்சராலும் ஓட முடியாது என தெரிவித்தார். ஆட்ட நாயகன் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்ட நாயகன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட 3 கோடி ரூபாய் நிதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.







