தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடங்கி, நிறைவுபெற்ற நிலையில், நீர்வளத்துறை சார்பில் முதல் மானியக்கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனை புகழ்ந்துரைத்தார். “அவர் என்னை இளைஞராக பார்க்கிறார்; நான் அவரை கலைஞராக பார்க்கிறேன்” திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனை பார்த்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு இது. முதலமைச்சரின் புகழுரையால் நெகிழ்ந்து போனார் அமைச்சர் துரைமுருகன். அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டப்பேரவையில், அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்தவர் துரைமுருகன் என்பதில் தொடங்கி, முதலமைச்சர் பேசிய ஒவ்வொன்றும் துரைமுருகனின் பண்பையும், பணி செயல்பாட்டையும் எடுத்துரைத்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பேராசியர் அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு பிறகு, தமக்கு வழிகாட்டியாக இருப்பவர் என தெரிவித்த முதலமைச்சர், துரைமுருகனும் கருணாநிதியும் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காக பேசுவார்கள் என்றும், அதை காணும் நமக்கு பொறாமை ஏற்படும் என்றும் மனம் திறந்து கூறினார்.
காட்பாடியில் 8 முறை, ராணிப்பேட்டையில் 2 முறை என 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவரிடம், எந்த துறையைக் கொடுத்தாலும் முத்திரை பதிப்பார் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், பொன்விழா நாயகராக துரைமுருகன் திகழ்கிறார் என்றும், பொன் விழா நாயகன் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்தும் முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தார்..
எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரையும் இரு கண்களை போல நேசித்தவர் துரைமுருகன் என்றார் சபாநாயகர் அப்பாவு. சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு துரைமுருகன் உதாரணம் என அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட, கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் நிழலாக இருப்பவர் என பாமகவின் ஜிகே.மணி தெரிவித்தார். துரைமுருகன் ஒரு நவரச நாயகன் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்தார். பாஜக, விசிக, காங்கிரஸ் என அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன், துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார் சபாநாயகர் அப்பாவு.
நன்றி தெரிவித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் இருக்குமோ என நினைத்தேன். ஆனால், தந்தையின் பாசத்தை மிஞ்சிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்து கண்ணீருடன் கைகூப்பி வணங்கி, தனது உரையை நிறைவு செய்தார்.








