குஜராத்தி மற்றும் ராஜஸ்தானிகளை வெளியேற்றிவிட்டால் பொருளாதார தலைநகராக மும்பை நீடிக்காது என்ற மகாராஷ்ட்ர ஆளுநரின் கருத்துக்கு தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்ட்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்கு குஜராத்திகளும் ராஜஸ்தானிகளும் பெரும் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களை மகாராஷ்ட்ராவில் இருந்து வெளியேற்றிவிட்டால், இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பை நீடிக்காது என அவர் கூறினார்.
அவரது இந்த பேச்சு மகாராஷ்ட்ராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் பேச்சுக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவ சேனா தலைநகர் உத்தவ் தாக்கரே, மராத்தி மொழி பேசும் மக்களை ஆளுநர் இழிவுபடுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆளுநர் வரம்பு மீறிவிட்டதாக விமர்சித்துள்ள அவர், அவர் தனது பதவிக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநராக இருப்பவரை அவமதிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள உத்தவ், ஆனால், அவரது பேச்சு மராட்டிய மக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது என கூறியுள்ளார்.
ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜ் தாக்கரே, ஆளுநர் மகாராஷ்ட்ர மக்களை காயப்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, தனது பேச்சில் உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்கு குஜராத்தி மற்றும் ராஜஸ்தானிகளின் பங்களிப்பு குறித்து மட்டுமே தான் பேசியதாகவும், மராட்டியர்களை இழிவுபடுத்தவில்லை என தெரிவித்துள்ளார். மராட்டியர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் மாநிலத்தை வளர்த்தெடுத்திருப்பதாகவும், அதன் காரணமாகத்தான் புகழ்பெற்ற தொழிலதிபர்களாக மராட்டியர்கள் பலர் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ராவை வளர்ச்சிபெற வைத்தவர்கள் மராட்டியர்கள்தான் என்றும் மும்பை மகாராஷ்ட்ராவின் பெருமை என்றும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.










