மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஏற்காட்டில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ள துவக்கப் பள்ளியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இடியும் தருவாயில் உள்ள அரசு பள்ளிகளை இடித்துவிட்டு புதிதாக கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10,301 பள்ளிகள் சேதமடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் வகுப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
சேதமடைந்த பள்ளியை விரைந்து திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி மாணவர்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை மேம்படுத்த தமிழகம் முழுவதும் 800 க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் அன்பிஸ் மகேஸ் தெரிவித்தார்.








