மகாராஷ்ட்ரா அதிருப்தி MLA-க்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு

மகாராஷ்ட்ராவின் சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு மத்திய அரசு ஓய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள், 9 சுயேட்சை எம்எல்ஏக்கள்…

மகாராஷ்ட்ராவின் சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு மத்திய அரசு ஓய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவில் சிவ சேனாவைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள், 9 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள ப்ளூ ரேடிசன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கின்றனர்.

இதனிடையே, புனேவில் உள்ள ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தானாஜி சாவந்த்தின் அலுவலகம், சிவ சேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனை மறுத்துள்ள மாநில உள்துறை அமைச்சர், பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு மத்திய அரசு ஓய் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. ரமேஷ் போர்னரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாட், லதாபாய் சோனாவேன், பிரகாஸ் சுர்வே உள்பட 15 பேருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படும். ஒரு ஷிப்டில் 5ல் இருந்து 7 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், அச்சுறுத்தலைப் பொறுத்து இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மத்திய அரசு முதன்முறையாக இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டுள்ளது.

இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் குவஹாத்தியில் இன்று நடைபெற்றது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.