மேற்கு வங்க அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். யார் இந்த பார்த்தா சாட்டர்ஜி? வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியாவை ஆளும் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக எதிர்க்கும் இந்திய தலைவர்களில் முன்னிலையில் இருப்பவர் மம்தா பானர்ஜி.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், இந்திய அரசியலில் பாஜகவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் மம்தா பானர்ஜி.
அவர்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட காரணமாக இருந்தவர்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரையே தனது அதிரடி நடவடிக்கைகளால் திணறடித்தவர்.
காங்கிரசில் இருந்து பிரிந்து 1998ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து, அடுத்த 14 ஆண்டுகளில் அக்கட்சியை மேற்கு வங்கத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர். 1977ல் இருந்து 2011 வரை ஏறக்குறைய மேற்கு வங்க மாநிலத்தை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆண்ட இடதுசாரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, அவர்களை ஜனநாயக ரீதியில் வீழ்த்தியவர்.
ஆரம்பம் முதல் அதிரடி அரசியலுக்குப் பெயர்போன மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்தவர்தான் பார்த்தா சாட்டர்ஜி.
திரிணாமூல் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட 1998 முதல் மம்தா பானர்ஜியோடு பயணிப்பவர். மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரிய தளகர்த்தர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் 2006ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக ஆனபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.
2011ல் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானபோது, கேபினெட் அந்தஸ்தில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.
வர்த்தகம், தொழில்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய 5 முக்கிய துறைகளை இவர் வசம் கொடுத்திருந்தார் மம்தா பானர்ஜி. அதோடு, சட்டப்பேரவையின் துணைத் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
2016ல் மீண்டும் மம்தா பானர்ஜி முதலமைச்சரானபோது, மீண்டும் அமைச்சரானார் பார்த்தா சாட்டர்ஜி. இம்முறை இவர் வசம் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, வர்த்தகம், தொழில்துறை, பொதுத்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளை அளித்தார் மம்தா பானர்ஜி.
இந்த காலகட்டத்தில்தான் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 2021ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி முதலமைச்சரானபோது, மீண்டும் அமைச்சரானவர் பார்த்தா சாட்டர்ஜி.
இம்முறை, அவருக்கு வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே இவர் பார்த்து வந்த உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி ஆகிய துறைகள் பிரத்யா பாசுவுக்கு ஒதுக்கப்பட்டன.
மேற்கு வங்கம் துர்க்கை வழிபாட்டுக்கு பெயர் பெற்றது. நவராத்திரி காலங்களில் மிகப் பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு விதவிதமாக துர்க்கை அம்மன் சிலைகள் காட்சிப்படுத்தப்படுவது மேற்கு வங்கத்தின் சிறப்பு. கொல்கத்தாவில் இதற்கென உள்ள மிகப்பெரிய துர்க்கை பூஜை கமிட்டியான நத்கலா உதயான் துர்க்கை பூஜை கமிட்டியின் தலைவராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவரான பார்த்தா சாட்டர்ஜிக்கு தற்போது வயது 69.
மேற்கு வங்க அரசியலில் செல்வாக்கு மிக்க மூத்த தலைவராகக் கருதப்படும் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை பார்த்தா சாட்டர்ஜி எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைவிட, மம்தா பானர்ஜி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பதே மிக முக்கிய கேள்வியாக உள்ளது.
நரேந்திர மோடிக்கு எதிராக மம்தா பானர்ஜி சீறும் சிங்கமாகவே இருப்பாரா அல்லது தனது அரசியல் வியூகத்தை மாற்றிக்கொள்வாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.










