குஜராத் கலவரத்தின் போது நரோடா காம் பகுதியில் 11 இஸ்லாமியர்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் உள்பட 68 பேரை விடுதலை செய்து அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீவைத்து எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஏராளமான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர்.
குஜராத் கலவரத்தை தொடர்ந்து அகமதாபாத்தின் நரோதா காம் பகுதியில் 11 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். நரோடா காம் மற்றும் நரோடா பாட்டியா என்ற இரு இடங்களில் இஸ்லாமியர்கள் எரித்து கொல்லப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலை தொடர்பாக பாஜகவின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்கி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட, பாஜகவின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் உட்பட 68 பேரையும் நீதிமன்றம் விடுவித்து அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 86 பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 18 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர்.








