குஜராத் தேர்தல்; வீடுகளில் இருந்து வாக்களிக்கும் முறை அறிமுகம்- தலைமை தேர்தல் ஆணையர்

குஜராத் சட்டசபை தேர்தலில் வயதான வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை சேகரிப்பார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற…

குஜராத் சட்டசபை தேர்தலில் வயதான வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை சேகரிப்பார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் உட்பட தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழுவினர் இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாத வயதான (சீனியர் சிட்டிசன்கள்) வாக்காளர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வருகை தந்து, வாக்காளர்களிடம் நேரடியாக வாக்குகளை சேகரிப்பார்கள். இந்த முழுமையான வாக்குப்பதிவு முறை, வீடியோ பதிவு செய்யப்படும்.

மேலும், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வாக்குப்பதிவின் போது அந்த வீட்டில் இருக்கலாம். இந்த வசதியைப் பெற விரும்புவோர், 12டி படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். தபால் வாக்குச் சீட்டு வசதியைப் பெற பயன்படுத்தப்படும் அதே 12டி படிவம் தான் இந்த புதிய முறை வாக்கெடுப்பிற்கும் நிரப்பப்படுகிறது.

இம்முறை சட்டசபை தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துவதாகவும், டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 10ம் தேதிக்குள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.